கிராமப்புறங்களில் பி.பி.ஓ., மையங்கள்

கிராமப்புறங்களில் பி.பி.ஓ., மையங்கள் துவங்கினால், முதலீடு, பயிற்சி உள்ளிட்டவற்றில் மானியம், போக்குவரத்து வசதி ஆகியவை ஏற்படுத்தி தரப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின், கடந்த 2011-12 நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், தொழில் முனைவோர், கிராமப்புறங்களில் தங்கள் பி.பி.ஓ., மையங்களை அமைப்பது தொடர்பாக, பி.பி.ஓ., கொள்கை மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இதன்படி, மேம்படுத்தப்பட்ட கிராமப்புற பி.பி.ஓ., கொள்கை வெளியிடப் பட்டுள்ளது.


வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள், அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கான சேவைகள், பெரும்பாலும், இந்தியாவில் உள்ள பி.பி.ஓ., நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும், வர்த்தகம் சார்ந்த முக்கிய பகுதிகளையே நோக்கி அமைந்துள்ளன. இப்பிரிவு மேலும் வளர, கிராமப் புறங்களில் இதற்கான சூழலை, அரசு ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியமாகிறது. இதற்கென மேம்படுத்தப்பட்ட கிராமப்புற பி.பி.ஓ., கொள்கை-2012 உருவாக்கப் பட்டுள்ளது.


இதன்படி, தமிழகத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில், பி.பி.ஓ., மையங்கள் அமைக்கும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கிறது. மேலும், பி.பி.ஓ., நிறுவனங்கள், தொழில் முனைவோர், கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு தேவையான கல்வியறிவு அளிக்கும் கல்வி நிறுவனங்களை துவங்கவும் வழி செய்கிறது. இந்த கொள்கையின்படி, மாநில தகவல் தொழில்நுட்பத் துறை, கிராமப்புறங்களில் பி.பி.ஓ., மற்றும் கல்வி நிறுவனங்களை அமைக்கும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்.
கிராமப்புறங்களில் தனியாரால் அமைக்கப்படும், பி.பி.ஓ.,க்களுக்கான இடம், மின்சாரம் மற்றும் தொடர்பியல் வசதிகளை, தகவல் தொழில்நுட்பத் துறையே அளிக்கும்.இத்துறை, தொழில் முனைவோருக்கும், பி.பி.ஓ., மையங்கள், கல்வி நிறுவனங்களை அமைக்கும் பெரிய நிறுவனங் களுக்கும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு, துறை சார்ந்த தொழில்முனைவோருடன் தொடர்பு ஏற்படுத்தி, எதிர்கால திட்டத்தை வளர்க்க உதவுகிறது. மேலும், கிராமப்புறங்களில் சொந்த இடம் அல்லது வாடகை இடத்தில், பி.பி.ஓ., மையங்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு, மேம்படுத்தப்பட்ட புதிய பி.பி.ஓ., கொள்கையின் படி, மானியமும் வழங்கப்படுகிறது. இதன்படி, கிராமப்புறங்களில், 50 பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு துவக்கப்படும் பி.பி.ஓ., மையங் களுக்கு, அடிப்படை முதலீட்டில், 20 சதவீதம், அதாவது அதிகபட்சமாக, ஐந்து லட்ச ரூபாய் வரை மானியம் வழங்கப் படுகிறது.


புதிய பி.பி.ஓ.,க்கள் துவக்கப்படும் போது, தகுதி வாய்ந்த பணியாளர்கள் தேவைப்படுவதால், அவர்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சியளிக்க, மாதம் ஒன்றுக்கு, 1,500 ரூபாய், பயிற்சிக்கான மானியம் வழங்கப் படுகிறது.  இதன் மூலம், ஒரு பி.பி.ஓ.,வில் பணியில் சேரும், 50 பேருக்கு, 2.25 லட்ச ரூபாய் வரை செலவிடப் படுகிறது. மேலும், கிராமப்புற பி.பி.ஓ.,வில் பணியாற்றுபவர்களுக்கு, அடிப்படை போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.


இந்த பி.பி.ஓ.,க்களை அமைக்கும் நிறுவனங்களுக்கான மானியத்தை, எல்காட் நிறுவனம் வழங்கும். ஊராட்சிகளில், பி.பி.ஓ., அமைக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்து, தகுதியுள்ள நிறுவனங்களை இறுதி செய்து, மானியத்தை இந்த நிறுவனம் வழங்கும். பி.பி.ஓ.,க்களில் பணியாற்றுபவர்களுக்கு பயிற்சியளிக்கும் பணியை ஐ.சி.டி., அகடமி மேற்கொள்கிறது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை, இந்த நிறுவனம் பணியாளர்களுக்கு வழங்கும். நவீன மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சிகளையும், இந்த நிறுவனம் வழங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மா. ஆண்டோ பீட்டர்  / M.Anto Peter
இயக்குநர் /  Director
சாப்ஃட்வியூ / Softview
118, நெல்சன் மாணிக்கம் சாலை / 118. Nelson Manickam Road
சென்னை - 600 029 /  Chennai -600029
தொலைபேசி / Tel: +91-44-42113535
வலைப்பூ / Blog: antopeter.blogspot.com
யூஆர்எல் / Url: www.softview.in

Comments

Popular posts from this blog

கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள்!

திருக்குறளும் அரிய தகவல்களும்