மதுரைக்கிளையின் தொடக்கவிழா கோலாகலமாக நடைபெற்றது...!!
அன்புடையீர்,
மதுரைக்கிளையின் தொடக்கவிழா டியூக் உணவக அரங்கில் நேற்று(04 -02 -2012 )மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. கணித்தமிழ் உறுப்பினர்கள் மாணவர்கள் பேரசிரியப்பெருமக்கள் ஆர்வலர்கள் பத்திரிக்கை நண்பர்கள் என எழுபதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக கணிச்சங்கத் தலைவர் மா. ஆண்டோ பீட்டர், செயற்குழு உறுப்பினர்கள் திரு சுகந்தன்,திரு ஸ்ரீனிவாஸ்பார்த்தசாரதி, மதுரைக் கிளைப் பொறுப்பாளர் திரு கப்ரியல் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைவர் ஆண்டோபீட்டர் தமது விளக்கவுரையில் கணித்தமிழ் சங்கத்தின் நோக்கம், செயல்பாடுகள்,எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
தலைமையேற்று சிறப்பித்த மதுரை ஆட்சியர் திரு உ. சகாயம் மதுரைக்கிளைத் தொடக்க விழாவினை குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தார். மதுரைக்கிளை செயற்குழு உறுப்பினர் திரு சுப்ரமணியின் புத்தகத்தை வெளியிட்டு மதுரை கணித்தமிழ் உறுப்பினர் திரு ஜனார்த்தனன் 'டிக் சாப்ட்' நிறுவனரின் மாணவர்களுக்கான இணையதளத்தினையும் ஆட்சியர் தொடங்கிவைத்தார். தலைமையுரையில் கணினியில் தமிழ் உட்புகுத்துவத்தின் இன்றியமையாத் தேவை, தமிழர்களின் ஆங்கில அடிமைமோகம் அதனால் எழும் தீமை குறித்து விரிவாக உரையாற்றினார். இத்தகு கேட்டினைக் களைந்து தமிழின் மேன்மை சிறக்க கணித்தமிழ் மதுரைக்கிளை பாடுபடும் என நம்பிக்கைத் தெருவித்தார்.
சிறப்புரை நிகழ்த்திய முனைவர் ஞானசம்பந்தம், சிரிக்கவைத்து சிந்திக்கவைக்கும் சிந்தனைச்சிற்பி அவர்கள் தமிழின் பொருண்மை ஆழம், அழுத்தம் விட்டிசை இவற்றின் வழியாகக்கூட பொருள் மாறுபடும் பாங்கு ஆகியவற்றை ஆழகாக நகைச்சுவையோடு எடுத்துரைத்தார். தமிழ் தட்டச்சு பயின்று தாமே கணினி உள்ளீட்டினை செய்ய உறுதி ஏற்றார்.
முன்னதாக மதுரைக்கிளை ஒருங்கிணைப்பாளர் திரு கள்ளிப்பட்டி குப்புசாமி அவர்கள் வரவேற்றார், மற்றொரு ஒருங்கிணைப்பாளர் முனைவர் திரு உமாராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மதுரைக்கிளை பொறுப்பாளர் திரு கப்ரியல் நன்றி நவின்றார். நிகழ்ச்சிகளை மதுரைக்கிளை செயற்குழு உறுப்பினர் பேராசிரியை திருமிகு ஜாஸ்லின் பிரிசில்டா தொகுத்துவழங்கினார். சைவ விருந்துடன் நிகழ்ச்சி இனிது நிறைவுற்றது.
Comments
Post a Comment