போராளிகள் காலத்தை வென்று மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்! - சாசலின் பிரிசில்டா.
போராளி
என்பவன் யார்?
உண்மையான
போராளிக்கான அடையாளத்தை டி.கே.சி. அவர்கள் விளக்குகிறார். “போராளிகளின் வாழ்நாளில் அவர்களின் செயல்கள் ஏசப்படவேண்டும்; எதிர்க்கப்படவேண்டும்; தன் வாழ்நாளில் அவன் சபிக்கப்படவேண்டும். இந்த மூன்று எதிர்வினைகளும் பெரியாருக்கும் இருந்தன, அம்பேத்கருக்கும் இருந்தன” என முடிக்கிறார். அவர்கள் இருவருக்கு மட்டுமல்ல, பாட்டிலே வீரம் காட்டிய பாரதிக்கும், வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கப்பல் ஓட்டிய வா.உ.சி-க்கும், அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்த்த பிடரல் காச்ட்ரோ, சேகுவேரா-வுக்கும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணம் பொருளாதாரமே என்று உணர்த்திய மார்க்ச், மற்றும் எங்கல்ச், லெனின் முதலிய உலகு தழுவிய புரட்சியாளர்கள் அனைவருமே சமகாலத்தின் அடிமைத்தனத்தை எதிர்த்ததால் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தவர்களே.
தற்சுகம் துறந்து சமூக நலனில் அக்கறை காட்டிய இவர்கள் காலத்தை வென்று மக்கள் மனதில் நிற்கிறார்களா?
·
சமூக
சிக்கல்களுக்கு அரசியல்
தீர்வை நாடிய அம்பேத்கரை மக்கள் மறந்து விட்டார்களா? மறந்திருந்தால் மாபெரும் தலித்திய எழுச்சியை 20-ஆம் நூற்றாண்டு சந்தித்திருக்குமா?
·
இராமசாமி
நாயக்கரை பெரியார் என ஏத்தி அவரின் பாதைவழி நடைபோடுவதை மக்கள் நிறுத்திவிட்டார்களா? நிறுத்தியிருந்தால் வந்தேறி ஆரிய இந்துத்துவத்தால் பைசாசுகள்(பிசாசுகள்), அரக்கர்கள் என்றும் வர்ணிக்கப்பட்ட திராவிடர்கள் விழிப்படைந்திருக்க முடியுமா?
·
வெள்ளை
ஏகாதிபத்தியத்தை
எதிர்த்த கட்டபொம்முவைப் போல் எம்மழழைகள்கூட மேடை மேடையாய் வேடம்கட்டி, நடித்துக்காட்டி வீரம் பேசவில்லையா?
·
பாரதியையும்,
பாவேந்தரையும்
பாடிப் பாடி எம்மக்கள் அந்நாளின் தீரத்தையும் வீரத்தையும் நினைவுகூறவில்லையா?
·
காலம்கடந்து
நாடுகடந்து மொழிகடந்து மார்க்ச்சின் பெயரும் காச்ட்ரோவின் பெயரும் சேகுவேராவின் பெயரும் எம்தமிழ் இளைஞர்களின் வாய்களில் முணுமுணுக்கப்படவில்லையா?
பின்னர் போராளிகள் மக்கள் மனதில் நிற்கவில்லை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அவர்கள் நிற்கிறார்கள்; அவர்கள் வீரம் பேசாப்படும்பொழுது கேட்கின்ற மக்களும் வீரம்கொள்கிறார்கள்; அவர்களின் தியாகம் நினைக்கப்படுகையில் ஒரு துளி கண்ணீரால் நனைத்து தம் செந்நீரை அப்போராளிகளின் சித்தாந்தம் காக்கத் தரத் தயங்கவில்லை.
பின் போராளிகள் மக்கள் மனதில் நிற்கிறார்களா? இல்லையா? என்ற இக் கேள்வி பிறந்ததின் நோக்கம் என்ன? இந்த ஐயம் விளைந்ததின் பின்புலம் என்ன?
உறுதியாகச் சிந்திக்க வேண்டும் தோழர்களே!
அப்போராளிகளின்
வீர உணர்வும் தியாக உள்ளமும் காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாக நம் கல்விநிலையங்களில்
மிகத் தெளிவாக மிகமிகத் தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லும்படி வரலாறுகள் கற்பிக்கப்படவில்லை.
“நம் முன்னால் இருக்கிற மிகப்பெரிய கடமை வரலாற்றை எழுதுவது அல்ல; எழுதப்பட்ட வரலாற்றைத்
திருத்தி எழுதுவதுதான்” என்று அறிஞர் டி.டி. கோசாம்பி குறிப்பிடுவது போல பள்ளிக்கூடங்களில்
போராளிகளின் தியாகம் இளம் சிறார்களுக்கு மிகச் சரியாகக் கற்றுத்தரப்படவேண்டும். அப்படிப்பட்ட
நிலைமை இல்லை என்பதால்த்தானோ என்னவோ கம்பம் தமுஎகச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு இவ்வய்யம்
தோன்றி இருக்கவேண்டும்; இந்தக் கேள்வி பிறந்திருக்க வேண்டும்; அதுவும் இந்தப் பட்டிமன்றத்
தலைப்பாக அமைந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
ஐயமில்லை. மக்களுக்காகப்
போராடிய, தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த எந்த
ஒரு போராளியையும் மக்கள் மறப்பதில்லை. தங்கள் குழந்தைகளின் பெயர்களில், தெருக்களின்
பெயர்களின், கல்வி நிலையங்களின் பெயர்களில், பொது இடங்களின் பெயர்களில் அவர்களின் பெயரை
வைத்து நினைவுகூர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதோ தேனியிலும் கூட பல வணிகக் கடைகளின்
பெயர்கள் பென்னிக்குயிக்-கின் பெயர்களாக உள்ளன. விரைவில் திறக்கப்பட இருக்கும் புதிய
பேருந்து நிலையத்தின் பெயரும் தென்மாவட்ட விவசாய மக்களுக்காகப் போராடிய போராளி பென்னிக்குயிக்-கின்
பெயர்தாங்கித்தான் திறக்கப்பட உள்ளது. எம் கிராமப்புர இளைஞர் பலரின் மேலாடைகளில் சேகுவேரா
உருவப்படமாகச் சிரித்துக்கொண்டிருக்கிறார். இன்னும் இவ்வாறே சொல்லிச் செல்லலாம். ஆகவே
“போராளிகள் காலத்தை வென்று மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்!” அவர்கள் அவ்வாறு நிற்பதால்த்தான் போராளிகளின்
பெயர்கள் சூட்டி மகிழ்கிறார்கள்; அவர்களின் கொள்கை வழி நடைபோட விளைகிறார்கள் என்று
கூறி நேரத்தின் அருமை கருதி என் விவாதத்தை இத்துடன் முடித்துக்கொண்டு, வாய்பளித்த நல்ல
உள்ளங்களுக்கும் வாய்மொழிகேட்ட தோழர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன், நன்றி. வணக்கம்.
-
ச.
சாசலின் பிரிசில்டா,
உதவிப்பேராசிரியர்,
தேனி.
குறிப்பு:
2013
ஆகச்ட்டு மாதத்தில் நடைபெற்ற கம்பம் தமுஎகச பட்டிமன்றத்தில் தம்பி தோழர் தமிழ்மணி கேட்டுக்கொண்டதன்பேரில்
பேசியது. அன்று தயாரித்த கருத்தடங்கிய தாள்கள் இன்று கிடைத்தது. சிறிது நேரமும் கிடைத்ததால்
தட்டச்சிட்டுவிட்டேன். பல்வேறு பேச்சரங்கின் தயாரிப்ப்புகளை நான் பாதுகாக்காமல் தொலைத்துவிடுவேன்.
பாதுகாத்து வைக்க எண்ணம் இருந்தாலும் அதனை ஆவணப்படுத்துவதில் சற்று சோம்பல். ஆனால்,
இந்தக் குறிப்பிட்ட தலைப்பில் பேசத்தயாரிக்கும் பொழுது தம்பி தமிழ்மணி சில புத்தகங்கள்
கொடுத்திருந்தார். அதில் சேகுவேரா-வின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமும் ஒன்று. அதனைப்படித்து
முடிக்கும்பொழுது அவரின் வாழ்க்கை நிகழ்வுகள் அழகாக ஆழமாக தெளிகாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.
அதன் காரணம் என்னவாக இருக்கும் என்று எண்ணியபொழுது, சேகுவேரா-விற்கு நாட்குறிப்பு எழுதும்
பழக்கம் இருந்திருக்கின்றது. தன் முதல் காதல் தொடங்கி அதன் முறிவு போராளியாய் மாறியது
தன் குழந்தைகளுக்குக் கடிதம் என அனைத்தையும் அவரே எழுதிவைத்திருந்ததால்த்தான் அவரின்
வாழ்க்கை வரலாறு நமக்குத் தெளிவாகக்கிடைத்திருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். அவ்வப்பொழுது
எழுதும் கவிதைகள் இதுபோன்ற மேடைப் பேச்சுத் தயாரிப்புகளையாவது நான் ஆவணப்படுத்த உறுதிகொண்டேன்.
ஆனால், இயலவில்லை. மகிழ்ச்சி என்னவென்றால் கிட்டத்தட்ட ஈராண்டுகள் கழித்து இவ்வுரையினைக்
கண்டடைந்து தட்டச்சு செய்துவிட்டேன். மகிழ்ச்சி.

Comments
Post a Comment